அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
Arvind Kejriwal: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு.
கடந்த மாதம் மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றம் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதன்பின் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில், டெல்லி மதுபான கொள்கை விவாகரத்தில் கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது, அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
கெஜ்ரிவால் கைது மற்றும் காவலில் அனுப்பியது சட்டத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்ட நடவடிக்கை, தேர்தல் நேரம் என்பதால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, முதலமைச்சர் என்பதால் எந்த சிறப்பு சலுகையும் அளிக்க முடியாது என கெஜ்ரிவால் கூறியது ஏற்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து டெல்லி உயர்ந்திமன்ற தீர்ப்புக்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்பதால் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தை நாடுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் அல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.