நாடு திரும்பியவர்கள் மருத்துவ படிப்பை நிறைவு செய்ய ஏற்பாடு – வெளியுறவுத்துறை அமைச்சர்
உக்ரைனில் மருத்துவ படிப்பை பாதியில் விட்டு திரும்பிய மாணவர்கள் பற்றி மக்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் படிப்பை நிறைவு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை அளித்துள்ளது. மருத்துவக் கல்வியை முடிக்க ஓராண்டு தளர்வு வழங்கியது உக்ரைன் அரசு.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போலந்து, ருமேனியா, கஜகஸ்தான், ஹங்கேரி நாடுகளுடன் இந்தியா பேசி வருவதாகவும் தெரிவித்தார். 90 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.
இதனிடையே பேசிய அவர், ரஷ்யா – உக்ரைன் விவகாரத்திற்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு, மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை மேற்கொள்ள அவசியம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் விவகாரம் உலகப் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தேசிய நலன் மட்டுமே எங்கள் முன்னுரிமை என்றும் கூறினார்.