அர்னாப் கோஸ்வாமி.. இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்.!
கடந்த 2018-ம் ஆண்டு மஹாராஷ்டிராவை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் தற்கொலைக்கு காரணம் அர்னாப் கோஸ்வாமி வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால் என கூறப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 04- ஆம் தேதி அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அப்போது நீதிபதிகள் ஜாமீன் வழங்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அர்னாப் நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இடைக்கால ஜாமீனில் விடுவிக்க அர்னாப் கோஸ்வாமி மற்றும் இரண்டு குற்றவாளிகளுக்கு ரூ.50000 பிணை தொகை கட்ட வேண்டும் என கூறி இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.