காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் இணைந்து டுடு-பசந்த்கர் பகுதியில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. பதுங்கிருந்த இடத்தை அடைந்ததும் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு ஜவான் படுகாயமடைந்தார்.
பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய ராணுவத்தின் வெள்ளை நைட் கார்ப்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
#OpBirliGali
Based on specific intelligence, a joint operation with @JmuKmrPolice was launched today in #Basantgarh, #Udhampur.
Contact was established and a fierce firefight ensued.One of our #Bravehearts sustained grievous injuries in the initial exchange and later succumbed… pic.twitter.com/eojsj5PPuU
— White Knight Corps (@Whiteknight_IA) April 24, 2025
தேடுதல் பின்னணி
கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இது கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும்.
இந்த பயங்கர தாக்குதலுக்குப் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.