3 தமிழ்நாட்டு வீராங்கனைகள் உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு!
தமிழக வீராங்கனை துளசி மணி மற்றும் நித்யா ஸ்ரீ சுமதி சிவன், வெண்கலம் வென்ற மனிஷா உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமணி முருகேசனுக்கும், வெண்கல பதக்கம் வென்ற மணிஷா ராமதாஸுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பதக்கங்கள் வென்ற நித்யஸ்ரீ சுமதி சிவன் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் 4 பேருக்கு அறிவிக்கப்பட்டது. குகேஷ் (செஸ்), ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி), மனுபாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்), பிரவீன் குமார் (பாரா தடகள வீரர்) ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படவிருக்கிறது.
விளையாட்டு துறையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை டெல்லியில் வரும் 17ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் வைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார்.
இந்தியாவில் விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக வழங்கப்படுகின்றன. இதில், வீரர்கள், பயிற்சியாளர்கள் அல்லது அமைப்புகளுக்கு அவர்களின் சாதனைகள் மற்றும் இந்திய விளையாட்டு வளர்ச்சிக்கான பங்களிப்புக்காக ஆறு வெவ்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.