கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் “இ-சந்தையில்” கொள்முதல் செய்ய ஒப்புதல்!
இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும் என அமைச்சர் தகவல்.
கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் இ-சந்தையில் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும். GeM (Government e-Marketplace) போர்ட்டலை அறிமுகம் செய்த பிறகு, சுய உதவிக் குழுக்கள், MSME-கள் மற்றும் சிறு வணிகர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்.
பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசாங்கத்தின் உள்ளாட்சி அமைப்புகள் ஜிஇஎம் போர்ட்டலில் இருந்து வாங்கத் தொடங்கின. கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள், சுய உதவிக் குழுக்கள், தொடக்க நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர் & MSME-கள் GeM-இல் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கான கணக்குப்படி பார்த்தால், 2017-18ல் ரூ.6220 கோடி கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், 2021-22ல் ரூ.1.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
ஐந்தாண்டுகளில் இந்த அதிகரிப்பு என்பது பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படை தன்மையை குறிக்கிறது. ஏழைகள், பெண்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் பெறும் நலனை குறிக்கிறது. மேலும் பிரதமர் மோடியின் தொழில்நுட்பம் தொடர்பான நடவடிக்கைகளால் கூட்டுறவு நிறுவனங்களும் தற்போது பயனடையும் என்றும் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் இ-சந்தையில் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் கூறினார்.