அமைச்சர் பயணித்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் பதட்டம்.!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் 14 நிமிடங்கள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சனிக்கிழமை, மாலை அரசு முறை சுற்றுப் பயணமாக பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க எம்ப்ரேர் 135 லெகசி(Embraer 135 legacy ) விமானத்தில் சுஷ்மா ஸ்வராஜ் புறப்பட்டுச் சென்றார்.விமானம் மொரீசியஷ் வான்பரப்பைக் கடக்கும் போது, மாலை 4 மணி 44 நிமிடங்களில் இருந்து, 4 மணி 58 நிமிடங்கள் வரை கிட்டத்தட்ட 14 நிமிடங்களுக்கு அதன் தொடர்பை ரேடாரில் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையடுத்து முதற்கட்ட எச்சரிக்கையான இன்செர்ஃபா (INCERFA) எச்சரிக்கையை மொரீசியஷ் பிரகடனம் செய்தது.
இன்செர்ஃபா என்றால் விமானம் இருக்கும் இடத்தையும், அதில் உள்ள பயணிகளின் நிலையும் என்ன ஆனது என அறியாத நிலையாகும். அதற்கடுத்த கட்ட எச்சரிக்கையான அலெர்ஃபா (ALERFA) வை பிரகடனப்படுத்தும் முன்,சுஷ்மா பயணித்த விமானத்தின் விமானி, கட்டுப்பாட்டு அறையுடன் மீண்டும் தொடர்புக்கு வந்தார். சில சமயம் மொரீசியஷ் தீவுக்கு அருகே வான்பரப்பில் பறக்கும் விமானங்கள் சில நிமிடங்கள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழப்பது குறிப்பிடத்தக்கது.