மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; பெங்களூரு ரயில் நிலையத்தில் பெண்ணின் சடலம்.!
பெங்களூரு ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள சர் எம் விஸ்வேஸ்வரயா டெர்மினல் (எஸ்விஎம்டி) ரயில் நிலையத்தில் உள்ள டிரம்மில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது இந்த ஆண்டில் நடைபெறும் இரண்டாவது நிகழ்வாகும், இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு சௌமியாலதா பார்வையிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 3பேர் ஆட்டோவில் டிரம்மைக் கொண்டு வந்து ரயில் நிலையத்தில் விட்டுச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
சடலத்தை விட்டுச்சென்ற 3 பேரும் சுமார் 31 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இறந்த பெண்ணின் விவரங்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதத்திலும் இதேபோன்று யஷவந்த்பூர் ரயில் நிலையத்தில், பிளாஸ்டிக் டிரம்மில் 30 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்து, அவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.