ஜெ.பி.நட்டா, அமித்ஷாவை தொடர்ந்து நிர்மலா சீதாராமனை சந்தித்த அண்ணாமலை..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக அதிமுக அறிக்கையும் வெளியிட்டது. அதிமுகவின் இந்த முடிவு குறித்து, அண்ணாமலை அவர்கள் பாஜக தேசிய தலைமை இதுகுறித்து பேசும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக மேலிடத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜகவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து பாஜக மேலிடத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்தார்.
தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கருத்துக்களை கேட்டபின் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதால் ஏற்படும் விளைவு பற்றியும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும், தமிழகத்தில் அதிமுக இன்றி பாஜக கூட்டணி அமைக்க முடியுமா என்பது குறித்தும் அறிக்கையில் தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தேசிய பாஜக மேலிட உத்தரவின்பேரில் தமிழக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை அவர்கள் டெல்லி சென்ற நிலையில், நேற்றிரவு ஜேபி நட்டா, அமித்ஷா சந்தித்து பேசி நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி உள்ளார். அதிமுக கூட்டணி முறிவு பற்றி நிர்மலா சீதாராமன் பாஜக மேலிடத்திற்கு அறிக்கை அனுப்பிய நிலையில் தற்போது அண்ணாமலை அவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.