மத்திய அரசின் பரப்புரை கருவியா.? விக்கிபீடியா மீதுபாய்ந்த அவதூறு வழக்கு.!
டெல்லி: தங்கள் செய்தி நிறுவனம் பற்றி தவறாக தகவல் பதிவிடப்பட்டு இருந்தது என கூறி விக்கிபீடியா மீது ANI செய்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியவில் பிரபலமாக உள்ள முன்னனி பத்திரிகை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ANI செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓர் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. உலகளாவிய தகவல் களஞ்சியமாக செயல்படும் விக்கிபீடீயா எனும் நிறுவனம் மீது தான் ANI அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளது.
விக்கிபீடியாவில் ஒரு நபரை பற்றியோ, ஒரு நிறுவனத்தை பற்றியோ, குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வு பற்றியோ தரவுகள் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதனை சில சமயம் குறிப்பிட்ட பயனர்கள் மாற்றி கொள்ளும் (எடிட்) வசதியும் இதில் உள்ளது. இதனால் சில சமயம் சர்ச்சைக்குரிய வகையில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டு அதனால் சில குழப்பங்களும் நிகழ்ந்துள்ளன .
இப்படியான சூழலில் , ANI செய்தி நிறுவனம் பற்றி விக்கிப்பீடியாவில் குறிப்பிடுகையில், அந்நிறுவனம் மத்திய அரசை விளம்பரப்படுத்தும் ஓர் பிரச்சார கருவியாக செயல்படுகிறது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை ANI செய்தி நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.
தவறான, சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட பயனர்களை அனுமதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 கோடி ரூபாய் அளவில் நஷ்டஈடு கேட்டு ANI நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த அவதூறு வழக்கு தொடர்பாக விக்கிபீடியா பதில் அளிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.