இந்திய விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள தேயிலை விற்பனையாளரின் மகள் ஆஞ்சல்.!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த தேயிலை விற்பனையாளரான சுரேஷ் அவர்களின் மகள் ஆஞ்சல் கங்கால் விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச் என்ற சிறிய மாவட்டத்தை சேர்ந்த தேயிலை விற்பனையாளரின் மகள் ஆஞ்சல் கங்கால் என்ற 23 வயதான பெண் இந்திய விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீதாராம் ஜாஜூ அரசு பெண்கள் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து பட்டம் பெற்ற ஆஞ்சலுக்கு கடந்த சனிக்கிழமை திண்டிகுலில் நடைப்பெற்ற விமானப்படை அகாடமியில் உள்ள 123 கேன்டீடேஸ் பாஸிங் அவுட் அணிவகுப்பில் பங்கேற்று ஜனாதிபதியிடமிருந்து பட்டம் பெற்றார்.
இது குறித்து ஆஞ்சல் கூறியதாவது, நான் IAF அதிகாரியாக இருக்க விரும்புகிறேன் என்று தன்னுடைய பெற்றோரிடம் கூறிய போது அவர்கள் எல்லோரை போலயும் கவலைப்பட்டார்கள். ஆனால் அவர்கள் என்னை ஒருபோதும் அதிலிருந்து விலக்க முயற்சிக்கவில்லை. மேலும் இந்த கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனது பெற்றோர்களான சுரேஷ் மற்றும் பபிதா கங்கவால் ஆகியோரால் அணிவகுப்பில் பங்கேற்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளதாகவும், இருப்பினும் அவர்கள் விழாவை தொலைக்காட்சியில் காண முடிந்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார். மேலும் தேசத்திற்கு சேவை செய்ய நான் எப்போதும் தயாராக இருக்கிறேன், அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பாக இதை பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆஞ்சல் மாநில அரசாங்கத்துடன் தொழிலாளர் ஆய்வாளராகவும், காவல்துறையினருடன் துணை ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் தேநீர் கடையில் அப்பாவிற்கு உதவி கொண்டே வீட்டுப் பாடங்களை முடித்து கஷ்டப்பட்டு படித்து தனது கனவை நனவாக்கிய ஆஞ்சலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.