ஆந்திரபிரதேசத்தில் மே 5 முதல் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு…
கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஊரடங்கை அறிவித்துள்ளார்…
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் 23,920 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. மேலும் 83 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது, தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,43,178 ஆக அதிகரித்துள்ளது, இதுவரையிலும் 9,93,708 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 8,136 பேர் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆந்திர அரசு உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசித்து ஆந்திர மாநிலம் முழுவதும் மதியம் 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பகுதி ஊரடங்கு உத்தரவு விதிக்க திங்கள்கிழமை முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை திறந்திருக்கும், அதன் பிறகு அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேர ஊரடங்கானது ஏற்கனவே இரவு 10 மணி முதல் மாநிலத்தில் அமலில் உள்ள நிலையில் புதிய பகுதி நேர ஊரடங்கு புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.