சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திரா ஐகோர்ட் உத்தரவு!
திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி கழக நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்ற வழக்கை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 16 மாதங்கள் கழித்து சந்திரபாபு நாயுடு மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 9ம் தேதி திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதிமுகவுக்கு சிக்கல்.. 2 முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை… ஆளுநர் அனுமதி
தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் விதித்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி தொடர்ந்த மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
53 நாட்களாக சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுக்கு கடந்த 31ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதாவது, வரும் 24ம் தேதி ராஜமுந்திரி சிறை கண்காணிப்பாளர் முன் சந்திரபாபு நாயுடு சரணடைய வேண்டும் என நிபந்தனை விதித்திக்கப்பட்டது. நவ.24ல் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை பாதிப்புகள் குறித்த விவரங்களை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்து வாதாடிய நிலையில், ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.