விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

திருப்பதி லட்டு தயாரிப்பில் சில விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இதனை முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பு மறுத்துள்ளது.

Andra CM Chandrababu Naidu - Andra Former CM Jegan Mohan Reddy

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள ஒரு லட்டு விலை 50 ரூபாய். ஒரு மாதத்தில் 1 கோடி லட்டுகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, பல்வேறு அமைப்பினரும், அரசியல் பிரமுகர்களும் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த விவாகரம் சமூக வலைதளங்களிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

சந்திரபாபு நாயுடு கூறியது

நேற்று முன்தினம் அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, “ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய அரசின் கீழ், திருப்பதி எழுமலையான் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வந்தது. அப்போது, லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன் மோகன் வெட்கப்பட வேண்டும் என்றார்.  இருப்பினும், நாங் கள் இப்போது தூய நெய்யை பயன்படுத்து கிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத் தின் புனிதத்தைப் பாதுகாக்க நாங்கள் பாடுபடுகிறோம் என்று கூறினார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மறுப்பு

சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சுப்பா ரெட்டி இதுப்பற்றி கூறுகையில் “சந்திரபாபு நாயுடு திருமலையின் புனிதத்தையும், கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையையும் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளார். திருமலை பிரசாதம் குறித்த அவரது கருத்துக்கள் மிகவும் தவறானது. யாரும் இது” போன்ற வார்த்தைகளை பேசவோ குற்றசாட்டுகளை கூறவோ முன்வர மாட்டர்கள் என கூறினார்.

தலைவர்கள் கருத்துக்கள்

பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், ” திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து, YSR காங் அரசு நியமித்த TTD நிர்வாகம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க
வேண்டும்.

குற்றம் செய்தவர்கள் மீது எங்களது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். அதேசமயம், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் இருக்கும் வழிபாட்டுப் பிரச்சனைகளை சரிசெய்ய “சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்” என்ற அமைப்பை நிறுவ வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்

அர்ச்சகர் ரமண தீட்சலு

திருப்பதி கோயில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சலு கூறுகையில், “லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பை கலந்து மகா பாவம் செய்துவிட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பே லட்டுவின் தரமும், சுவையும் மாறுவதாக கூறினோம். ஆனால் தேவஸ்தானம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பதியில் ஆகம சாஸ்திர படி வழிபாடு நடத்தப்படுவதில்லை” எனக் கூறினார்.

லட்டு ஆய்வறிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் மாடு, பன்றி இறைச்சி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்படடது என்று உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. National Dairy Development Board ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ராஜ் நெய் விளக்கம்

எங்கள் நிறுவனத்தின் நெய் தரமானது என்பதை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சோதித்து அறிந்துக்கொள்ளலாம். எங்கள் நெய் தரம் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாக கொள்முதலை நிறுத்தியுள்ளது.

ஆனால், சோதனையில் எங்கள் நெய் தரமானதுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்தது குறித்து எந்த தகவலும் வரவில்லை என திருப்பதி லட்டு செய்ய நெய் சப்ளை செய்த திண்டுக்கல் AR Dairy Fooda-ன் ராஜ் நெய் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கு

திருப்பதி லட்டில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றச்சாட்டுகள் மீது, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு வரும் புதன்கிழமை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என ஆந்திர உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பு

திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாவும் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே உண்மை என்னவென்று வெளிச்சத்திற்கு வரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்