தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற நான்காம் கட்ட தேர்தல் தேதி மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி , பாஜக மற்றும் ஜனசேனா உடன் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன.
இந்த தேர்தலுக்குக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி முதல் தொடங்கியது. முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி சார்பாக போட்டியிடும் நடிகர் பாலகிருஷ்ணா இந்துப்பூர் தொகுதியிலும், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் பிதாவரம் தொகுதியிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். அதே போல மற்ற சில முக்கிய ஆந்திர அரசியல் தலைவர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று புலிவெந்துலா சட்டமன்ற தொகுதியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தலையில் முன்னதாக அடிபட்டு இருந்த காயத்திற்காக பேண்டேஜ் ஒட்டி இருந்தார்.
கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தூரத்தில் இருந்த ஒருவர் திடீரென கல் வீசியதால் கண்ணிற்கு மேலே சிறிய காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கான பேண்டேஜை தான் இன்றும் தலையில் ஒட்டி இருந்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.