டிரம்ப் விதித்த புதிய வரி! பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை!
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிமுறைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. அமெரிக்க பொருளாதரத்தை முன்னிறுத்தி அவர் மேற்கொண்டுள்ள இந்த புதிய வரலாறு காணாத வரி விதிப்பால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இந்த வரி விதிப்பு குறித்து பல்வேறு நாடுகளும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. மேலும், இந்த புதிய வரி விதிப்பால் அந்தந்த நாடுகள் எதிர்கொள்வது பற்றியும் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்தியாவும், இந்த புதிய வரி விதிப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
அதன்படி, தற்போது டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெள்ளியாகியுள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி ஆயோக் முதன்மை அதிகாரிகள், வர்த்தகத் துறை அதிகாரிகள் மற்றும் வெளியுறவு துறையின் மூத்த அதிகாரிகள் என பலர் பங்கேற்று உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் அறிவித்துள்ளார். இந்த வரி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.