5,500 பேர் மீட்பு.! இதுவரை இல்லாத பேரழிவு.! முதல்வர் பினராயி விஜயன் தகவல்.!
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாட்டில், முண்டைக்கை பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அடுத்து 4 மணி அளவிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.
சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த பகுதிக்கு செல்ல கூடிய பாலங்கள், சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சூரல்மலை பகுதியில் தான் சுமார் 500 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் என்றும், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளும் தாமதமடைகின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இப்படியான சூழலில் வயநாடு நிலச்சரிவு குறித்தும், மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அதில் கூறுகையில், வயநாட்டில் 321 தீயணைப்பு வீரர்கள்மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தின் சேவையும் மீட்புப்பணியில் முக்கிய பங்காற்றி வருகிறது. 60 பேர் கொண்ட தேசிய மீட்புகுழுவினர் வயநாட்டிற்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெங்களூருவில் இருந்து 89 பேர் கொண்ட மீட்புக்குழுவும் வயநாடு வந்துள்ளது.
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. பேரிடர் குறித்து அறிந்ததும், பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், இந்த நெருக்கடியை சமாளிக்க நாங்கள் இணைந்து செயல்படுவோம் என என்னிடம் உறுதியளித்தனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை மீட்கப்பட்ட உடல்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 5,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5 அமைச்சர்கள் அடங்கிய குழு நிலச்சரிவு மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வயநாட்டிற்கு கூடுதலாக 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக, மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக மோப்ப நாய் படை வரவுள்ளது. அதன் மூலம் மண்ணில் புதையுடைந்தவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை துல்லியமாக பின்பற்ற வேண்டும். முகாம்களில் உள்ளவர்களுக்கு குடிநீர், உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வடக்கு பகுதி ஐஜி, டிஐஜி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜி ஆகியோர் மீட்புநடவடிக்கையை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறார்கள்.
பேரிடர் நடக்கும் இடங்களில் மக்கள் நேரில் சென்று பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும். பல்வேறு அரசு துறைகளின் கீழ் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கனமழை காரணமாக அத்தியாவசிய சேவைகளில் உள்ள அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்று தற்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.