10 நாளில் மரண தண்டனை : மம்தா பேனர்ஜி அதிரடி.!
கொல்கத்தா : பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் மேற்கு வங்கத்தில் கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்திற்கு தற்போது வரையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் நேற்று மாணவர்கள் பேரணி, இன்று கடையடைப்பு, 20 நாட்களாக தொடரும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கூட இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நீதி கேட்டு பேரணி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதே போராட்டகாரர்களின் கோரிக்கையாக உள்ளது.
இப்படியான சூழலில் இன்று திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சத்ர பரிஷத் (மாணவர் அமைப்பு) தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான பேரணியில் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி இன்று கலந்துகொண்டார். அந்த பேரணியில் மம்தா பேசுகையில், ” பாலியல் குற்றவாளிகளுக்கு விசாரணை முடிந்து அடுத்த 10 நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றும் சட்டதிருத்தத்தை நாங்கள் இயற்றுவோம்.
இந்த சட்டத்திருத்தம் அடுத்த வாரம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்படும். அதனை ஆளுநர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்புவோம். உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பாமல் தாமதப்படுத்தினால் ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்.
20 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வரும் ஜூனியர் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மருத்துவர்கள் தங்களுடைய சக ஊழியருக்கு நீதி கோரி ஆரம்பம் முதல் போராடி வருகின்றனர். அதனை நான் அனுதாபத்துடன் பார்த்து வருகிறேன். சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற உங்கள் வலி எங்களுக்கு புரிகிறது.
ஆனாலும் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதால் தயவுசெய்து பணிக்கு திரும்புங்கள் பெண் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கானது, கொல்கத்தா காவல்துறையிடம் இருந்து, மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) சென்று 16 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் நீதி கிடைக்கவில்லை.” என்று மம்தா பேனர்ஜி கூறினார்.