கேரள முதல்வரின் வயநாடு பயணத்தில் திடீர் மாற்றம்.! நாளை அனைத்துக்கட்சி கூட்டம்.!
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் பாதிப்புகள் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மீட்பு பணியில் மத்திய மாநில மீட்பு படையினர், இந்திய ராணுவத்தினர், விமானப்படையினர், தமிழக மீட்புப்படை மற்றும் தீயணைப்புத்துறையினர் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் வயநாட்டில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நேரில் பார்வையிட உள்ளார் என கூறப்பட்டது.
தற்போது அந்த பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரத்தில் மீட்புப் பணிகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அதனை தொடர்ந்து, பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை வயநாட்டில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால் இன்று நிகழ இருந்த வயநாடு பயணம் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.