வரலாறு காணாத பேய் மழை! மக்களவையில் திமுக அளித்த முக்கிய நோட்டீஸ்!
ஃபெஞ்சல் புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்தது. புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி நோக்கி சென்ற ஃபெஞ்சல் புயலால் அந்தந்த மாவட்டங்களில் வெகு வருடங்கள் கழித்து பேய் மழை பெய்துள்ளது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி மழைநீர் வெள்ளமாக ஊருக்குள் புகுந்துள்ளது.
இந்த வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதம் குறித்தும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் எம்பி டி.ஆர்.பி.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழ்நாடு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் அளித்துள்ளார்.
ஏற்கனவே, எதிர்க்கட்சிகள் அளித்துள்ள அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரிய ஒத்திவைப்பு நோட்டீஸ், மணிப்பூர் விவகாரம் குறித்த விவாதம் ஆகியவைக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள் அனுமதி அளிக்காத காரணத்தால் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த வாரம் முழுக்க நாடாளுமன்ற அலுவல் பணிகள் நடைபெறாமல் முடங்கியது குறிப்பிடத்தக்கது.