குஜராத்தில் இன்று முதல் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு!
இன்று முதல் குஜராத்தில் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு என அறிவிப்பு.
குஜராத்தில் இன்று (ஏப்ரல் 1) முதல் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது என்று குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, ‘அமுல் கோல்டு’ பால் 500 மில்லி 32 ரூபாய்க்கும், ‘அமுல் ஸ்டாண்டர்டு’ 500 மில்லி ரூ.29க்கும், ‘அமுல் தாசா’ 500 மி.லி ரூ.26க்கும், ‘அமுல் டி-ஸ்பெஷல்’ 500 மி.லி ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குஜராத்தில் சவுராஷ்டிரா, அகமதாபாத் மற்றும் காந்திநகர் சந்தைகளில் அமுல் பால் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் அமுல் பால் விலை உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத்தில் அமுல் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டு பிப்.3ம் தேதி, குஜராத்தைத் தவிர நாட்டிலுள்ள அனைத்து சந்தைகளிலும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று முதல் குஜராத்தில் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. தற்போது, குஜராத்தில் உள்ள 18,154 கிராமங்களில் உள்ள 36 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து GCMMF-இன் உறுப்பினர் சங்கங்கள் தினமும் சராசரியாக 264 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கின்றன.