இந்திய சட்டத்திலிருந்து தப்பிக்க, இங்கிலாந்து குடியுரிமை கோரும் அம்ரித்பால்.!
தப்பியோடிய அம்ரித்பால் இங்கிலாந்து குடியுரிமை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் பிரிட்டிஷ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக உயர்மட்ட உளவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அம்ரித்பால் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற கிரண் கவுரை திருமணம் செய்து கொண்ட அடிப்படையில் அவர் குடியுரிமை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
காலிஸ்தானி ஆதரவாளரான அம்ரித்பால் கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்து குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் நிலுவையில் உள்ளது, மேலும் பிரிட்டிஷ் இன்னும் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கவில்லை.
வாரிஸ் பஞ்சாப் டி என்ற தீவிர அமைப்பிற்கு தலைவராக இருந்துவரும் அம்ரித்பால் சிங், அவரது முக்கிய கூட்டாளி மற்றும் கடத்தல் குற்றம் சாட்டப்பட்ட லவ்ப்ரீத் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, பிப்ரவரி 23 அன்று நடந்த ஒரு பெரிய போராட்டத்துடன் தொடர்புடையவர். இந்த மோதலில் 6 போலீசார் காயமடைந்திருந்தனர்.
இதனால் இவரை பஞ்சாப் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறது. சமீபத்தில் இவர் ஹரியானாவில் பதுங்கியிருந்ததாகவும், அவரைப் போன்ற ஒருநபர் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. மேலும் அடைக்கலம் கொடுத்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.