நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்டின் பதவிக்காலம் நீட்டிப்பு..!
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்டின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் பொது கொள்கை சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் கான்ட் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.இதனையடுத்து,இந்த பதவிக்காலம் 2019 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மீண்டும் நடப்பு ஆண்டு ஜூன் 30 வரை பதவிக்காலம் இரண்டு ஆண்டு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில்,30.06.2021 முதல் 30.06.2022 வரை மேலும் ஒரு வருடத்திற்கு நிதி (என்ஐடிஐ) ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக கான்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இவர் 1980 களில் கேரள மாநில சுற்றுலாத் துறையிலும்,தொழில் துறையிலும் பணி புரிந்தார்.கோழிக்கோடு மாவட்ட ஆட்சித் தலைவராக பதவி வகித்தார்.பின்னர்,அம்மாவட்ட வானூர்தி நிலையம் நிர்மாணிப்பதிலும் ஈடுபட்டார்.செவனிங் ஸ்காலர்சிப் என்ற பயிற்சியும் இவர் பெற்றுள்ளார்.மேலும்,மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா,இன்க்ரீடபில் இந்தியா போன்ற திட்டங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.