ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதாக அமித்ஷா மிரட்டுகிறார்..! கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு.!
பஞ்சாப்: வரும் ஜூன் 1ஆம் தேதி 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுடன் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைய உள்ளது. இந்த 7ஆம் கட்ட தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (ஞாயிறு) பஞ்சாப், லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, பஞ்சாபில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றியடைய செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது பஞ்சாபில் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்கு பிறகு பகவந்த் மான் அரசாங்கம் (ஆம் ஆத்மி அரசு) நீண்ட காலம் நீடிக்காது என்று கூறினார்.
இதனை அடுத்து, பஞ்சாப் அமிர்தசரஸில் வணிகர்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் பேசுகையில், அமித்ஷாவின் தேர்தல் பிரச்சாரத்தை நீங்கள் (மக்கள்) கேட்டீர்களா? பிரச்சார கூட்டத்தில் அவர் மிரட்டல் விடுத்தார். ஆரம்பத்தில், அவர் பஞ்சாப் மக்களை அதிகம் தவறாக பேசினார். ஆனால், தற்போது ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, பஞ்சாப் அரசு கவிழும் என அமித்ஷா மிரட்டல் விடுத்தார். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பகவந்த் மான் முதலமைச்சராக இருக்க மாட்டார் என்று கூறுகிறார் என தேர்தல் பிரச்சாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.