அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!
அதானி விவகாரத்தை மறைக்க அமித்ஷா பேசினார். இதனை மறைக்க தற்போது வேறு விதமாக பிரச்னையை திசை திருப்புகிறார்கள் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவுக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம், காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக எம்பிபிகள் போராட்டம், பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கிழே விழுந்ததாக எழுந்த புகார் என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறின.
பாஜக – காங்கிரஸ் என இரு கட்சியினரும் நாடாளுமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். இப்படியான சூழலில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் பேசிய ராகுல் காந்தி, மக்களவை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன், அமெரிக்காவில் அதானிக்கு எதிராக வழக்கு வந்ததையடுத்து, அதன் மீதான விவாதத்தை நிறுத்த பாஜக முயன்றது. அதானி விவகாரத்தில் விவாதம் வேண்டாம் என்பதுதான் பாஜகவின் அடிப்படை வியூகம். அதன் பிறகு அமித்ஷாவின் பேச்சு வந்தது, நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ்-களின் சிந்தனைக்கு எதிரானவர்கள்.
அவர்கள் அண்ணல் அம்பேத்கரின் நினைவுகளையும் பங்களிப்புகளையும் அழிக்க விரும்புகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். இன்று மீண்டும் புதிய கவனச்சிதறலை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். நாங்கள் அமைதியாக அம்பேத்கர் சிலையிலிருந்து நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்று கொண்டிருந்தோம். பாஜக எம்பிக்கள் எங்களை உள்ளே செல்ல விடவில்லை. அவர்கள் டாக்டர் பிஆர் அம்பேத்கரை அவமதித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. நரேந்திர மோடியின் நண்பர் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு இருப்பதும், நரேந்திர மோடி இந்தியாவை அதானிக்கு விற்கிறார் என்பதையும் அவர்கள் மறைக்க விரும்பும் முக்கியப் பிரச்சினை. இதுதான் இங்குள்ள முக்கிய பிரச்சினை. இதைப் பற்றி விவாதிக்க இவர்கள் விரும்பவில்லை” என ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.