எதிர்கட்சிகள் தொடர் அமளி.. டெல்லி வன்முறை குறித்து பதிலளிக்கும் அமித்ஷா…
கடந்த 2-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட தொடர் தொடங்கியதில் டெல்லியில் நடந்த மோதல் குறித்து விவாதிக்க அனுமதிக்கும் படி எதிர்கட்சியான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களவையில் கடந்த 5-ம் தேதி டெல்லியில் மோதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சபாநாயகர் மேஜையில் இருந்த ஆவணங்களை எடுத்து வீசினர்.இதனால் காங்கிரஸ் எம்பி 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பின்னர் 6-ம் தேதி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு பதாகைகளுடன் சென்று டெல்லி வன்முறை பற்றி விவாதிக்கவும் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
இதனால் மக்களவை நண்பகல் 12 வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது ஹோலி பண்டிகை முடிந்த பிறகுதான் டெல்லி வன்முறை பற்றி விவாதிக்கப்படும் என மத்திய அரசு கூறியது.
இதனால் கடந்த 6 -ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.இந்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடியுள்ளது. டெல்லிவன்முறை தொடர்பாக மக்களவையில் இன்று மாலை 5;30 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.