300க்கும் அதிகமான இடங்கள்… மீண்டும் மோடி தான் பிரதமர்.! அமித்ஷா நம்பிக்கை.!
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக பொதுகூட்டத்தில் பேசியுள்ளார்.
அசாம் மாநில திப்ருகரில் புதிய பாஜக அலுவலகம் கட்டுவதற்கான பணிகளின் தொடக்கமாக நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
அமித்ஷா பேச்சு :
புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவை அடுத்து, பாஜக சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி குறித்தும் பல்வேறு கருத்துக்களை மக்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.
300 தொகுதிகளில் வெற்றி :
அதில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அசாம் மாநிலத்தில் உள்ள 14 மக்களவை தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றியடையும் எனவும், நாடு முழுவதும் சுமார் 300 தொகுதிகளுக்கும் அதிகமாக பாஜக வென்று ஆட்சியை கைப்பற்றும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
காங்கிரஸ் இறங்கு முகம் :
பிரதமர் மோடி தலைமையில் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்பார் என கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியை எந்தளவுக்கு காங்கிரஸ் விமர்சனம் செய்கிறதோ, அந்தளவுக்கு காங்கிரஸ் இறங்கு முகத்தில் சென்று கொண்டு இருக்கும் எனவும் காங்கிரஸ் கட்சி மீதான தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
காங்கிரஸ் காணாமல் போகும் :
அடுத்ததாக, ராகுல்காந்தி நடைபயணம் முடிந்த பிறகு நடைபெற்ற 3 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திதுள்ளது. பொதுவாக வடகிழக்கு மாநிலங்கள் காங்கிரஸ் கோட்டை என கூறப்பட்டு வருவதுண்டு. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங்களில் காணாமல் போய் கொண்டு இருக்கிறது விரைவில் நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என மத்திய அமைச்சர் அமித்ஷா அந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.