“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
அம்பேத்கர் குறித்து நான் பேசியதை காங்கிரஸ் கட்சியினர் திரித்து கூறுகின்றனர். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல என அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என பேசினார். அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும், ஜெய் பீம் ஜெய் பீம் என கோஷமிட்டு அமித்ஷா பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். அம்பேத்கர் குறித்த தனது பேச்சுபேசுபொருளாக மாறியதை அடுத்து, மத்திய அமைச்சர் அமித்ஷா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று 75வது ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறித்து விவாதம் நடந்தது. அப்போது கடந்த 75 வருடங்களில் நாட்டின் சாதனைகள் குறித்தும் அவையில் பேசினோம். ஒவ்வொரு கட்சிகளும், ஒவ்வொரு பிரச்சினைகளிலும் வெவ்வேறு கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால் விவாதம் எப்போதும் உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் உண்மைகளை திரித்து தவறாக வழிநடத்தி வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நேற்று முதல் காங்கிரஸ் கட்சியினர் உண்மைகளை திரித்து பேசி வருகின்றனர். காங்கிரஸ் அம்பேத்கருக்கு எதிரானது. இடஒதுக்கீடு மற்றும் அரசியல் சாசனத்துக்கும் காங்கிரஸ் எதிரானது. வீர் சாவர்க்கரையும் காங்கிரஸ் அவமதித்தது. எமர்ஜென்சியை விதித்து அனைத்து அரசியலமைப்பு சட்டங்களையும் மீறினர். அதனை பாஜக உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர்.
நேரு அம்பேத்கரை குறை கூறியுள்ளார். நேரு உள்ளிட்ட காங்கிரசார் அம்பேத்கரை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. அம்பேத்கர் கொள்கைகளை உயர்த்திப்பிடிப்பது பாஜக அரசு மட்டுமே. அம்பேத்கர் புகழை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தது பாஜக அரசு மட்டுமே. நாடாளுமன்றத்தில் நான் பேசிய கருத்துக்களை காங்கிரஸ் திரித்து பேசுகிறது. இது வன்மையாக கண்டிக்க தக்கது. ” என மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.