எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா’ மக்களவையில் தாக்கல்!
எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதற்கு திட்டமிட்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னதாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கான அடுத்த கட்டமாக ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டமசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருக்கவேண்டும். கடந்த 3 நாட்களாக அவர் 3 நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்ற நிலையில், இன்று டெல்லி திரும்பவுள்ளார். எனவே, இன்று ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
மேலும், இந்த திட்டத்தை கொண்டுவருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளும் தெரிவித்தனர். குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி எம்பி சிவா,பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.
இப்படி பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் இன்று “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. ஒருவேளை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டால் அடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலோடு மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.