ஏஎம்சி நடத்தும் மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயர்
அகமதாபாத் முனிசிபல் கார்பரேசன் (ஏஎம்சி) நடத்தும் மருத்துவக் கல்லூரி இனி பிரதமர் மோடியின் பெயரால் அழைக்கப்படும்.
கல்லூரியின் பெயரை மாற்றுவதற்கான முன்மொழிவு செப்டம்பர் 14 ஆம் தேதி அகமதாபாத் முனிசிபல் கார்பரேசன் (ஏஎம்சி) நிர்வாகக் குழுவால் அனுப்பப்பட்டது மற்றும் இதற்கான தீர்மானம் நேற்று வியாழக்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டது. மேலும் இது மோடியின் பெயரிடப்பட்ட நகரின் இரண்டாவது பெரிய நிகழ்வாகும். இதற்கு முன் மொடேரா சர்தார் படேல் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஏஎம்சி), வியாழக்கிழமை நடைபெற்ற அதன் நிலைக்குழு கூட்டத்தில், மருத்துவக் கல்லூரியின் பெயரை ‘நரேந்திர மோடி மருத்துவக் கல்லூரி’ என மாற்றுவதற்கான ஒப்புதல் அளித்தது. இந்தக் கல்லூரி, சேத் லல்லுபாய் கோர்தன்டாஸ் முனிசிபல் பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
150 எம்பிபிஎஸ் இடங்களுடன் 2009 ஆம் ஆண்டு குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த கல்லூரி, தற்போது இளங்கலை பட்டப்படிப்புக்கு 200 இடங்களுடன் செயல்பட்டு வருகிறது.