ஆம்புலன்ஸ் கிடைக்காத அவலம்…! தகனம் செய்வதற்காக பைக்கில் கொண்டு செல்லப்பட்ட பெண்ணின் சடலம்…!
ஆந்திர மாநிலத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை, இருசக்கர வாகனத்தில் வைத்து சென்ற அவலம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழப்போரின் சடலங்கள் எரிப்பதற்கு கூட இடம் இல்லாத அவலம் காணப்படுகிறது. இந்நிலையில் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மண்டாச மண்டல் கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் திங்கட்கிழமை அன்று கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இவருக்கு கொரோனா பரிசோதனை, முடிவுகள் வருவதற்கு முன்பாகவே அப்பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் அவரது உடலை தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் மற்றும் வேறு ஏதாவது வாகனங்கள் கிடைக்குமா என்று காத்திருந்த நிலையில், எதுவும் கிடைக்காததால் அப்பெண்ணின் மகனும் மருமகளும் அவரது உடலை இரு சக்கர வாகனத்தில் வைத்து தகனம் செய்வதற்காக தங்களது கிராமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.