கேரளா திரையரங்கில் அசத்தல் வசதி.. தாய்மார்கள் இனி ஹேப்பி அண்ணாச்சி.!
கேரள அரசால் நடத்தப்படும் திரையரங்குகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தியேட்டருக்குள் அழைத்துச் செல்ல “அழுகை அறை” ஒன்றை அமைத்துள்ளது.
கேரளாவில் அரசாங்கத்தால் நடத்தப்படும் திரையரங்கில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உள்ளே அழைத்துச் சென்று படம் பார்ப்பதற்காக “அழுகை அறை” ஒன்றை அமைத்துள்ளது. கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கைரளி-ஸ்ரீ-நிலா என்ற திரைஅரங்கத்தில் உள்ள இந்த அழுகை அறையின் புகைப்படங்களை கேரள கலாச்சார விவகார அமைச்சர் வி.என்.வாசவன் பகிர்ந்துள்ளார்.
இந்த அறையில் ஒரு குழந்தைக்கான தொட்டில் மற்றும் டயப்பர் மாற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் படம் பார்க்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரும் பெற்றோர்கள் படத்தை பார்ப்பது கடினம். குழந்தைகள் பெரும்பாலும் தியேட்டருக்குள் இருக்கும் சத்தம், இருட்டு போன்றவைகளால் அழத் தொடங்குகின்றனர், இதனால் பெற்றோர்கள் வெளியே செல்ல நேரிடுகிறது” என்று அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் திரையரங்குகளை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றதாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த முயற்சி என்றும், மாநில அரசின் கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (KSFDC) மாநிலத்தில் உள்ள மற்ற திரையரங்குகளில் இதுபோன்ற மேலும் பல அழுகை அறைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.