தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள தீபங்களோடு இணைக்கப்பட்ட அமர் ஜவான் ஜோதி..!
கடந்த 50 ஆண்டுகளாக அணையாமல் எரிந்து வந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக இருந்த அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள தீபங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.
1914-21 வரை முதல் உலகப்போரின் போது உயிர் நீத்த பிரிட்டிஷ், இந்திய வீரர்களின் நினைவாக 1921 ஆம் ஆண்டு டெல்லியில் ’இந்தியா கேட்’ நினைவுச்சின்னம் பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட நிலையில், இந்தியா கேட் பகுதியில் 1971-ம் ஆண்டு அமர் ஜவான் ஜோதி என நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இந்த அணையா விலக்கானது சுமார் 50 ஆண்டுகள் அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கிறது.
இதனையடுத்து, 1947-ம் ஆண்டு சுதந்திரந்திற்கு பின்னர் 1947-48 -ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற முதல் போரில் இருந்து தற்போதுவரை நடைபெற்ற போர்களில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னமும் இந்தியா கேட் பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக அணையாமல் எரிந்து வந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக இருந்த அமர் ஜவான் ஜோதி இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அணையா தீபம் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள தீபங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.
டெல்லி அமர்ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். ராணுவ முறைப்படி அமர் ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஜோதியை ஏந்தி போர் நினைவுச் சின்னம் நோக்கி ராணுவ வீரர்கள் சென்றனர். இந்த நிகழ்வில், முப்படைகளின் மூத்த அதிகாரிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.