“இதை செய்யும் இணையதளம்,யூடியூப் சேனல்கள் அனைத்தும் முடக்கப்படும்” – அனுராக் தாக்கூர் எச்சரிக்கை!
இந்தியாவுக்கு எதிராக பொய்களைப் பரப்பும்,சதி செய்யும் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலியான செய்திகளை பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் முடக்கப்பட்டதாகவும்,நாட்டிற்கு எதிராக “சதி செய்யும்” நபர்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக,செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“உளவுத்துறை அமைப்புகளுடன் “நெருக்கமாக ஒருங்கிணைந்த” முயற்சியில், கடந்த ஆண்டு டிசம்பரில் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்பியதால் அவற்றைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.மேலும்,யூடியூப்பும் முன் வந்து அவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்தது.
அதே சமயம்,இனி வரும் நாட்களிலும் இந்தியாவுக்கு எதிரான சதி,பொய்களைப் பரப்புதல் மற்றும் சமூகத்தை பிளவுபடுத்துதல் போன்ற எந்தவொரு இணையதள மற்றும் யூடியூப் கணக்குகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில்,முடுக்கப்பட்ட இந்த 20 யூடியூப் சேனல்களும்,இணையதளங்களும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் வலையமைப்பைச் சேர்ந்தவை என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஏற்கனவே கூறியது.
அதாவது,காஷ்மீர்,இந்திய ராணுவம்,இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள்,ராம் மந்திர்,(மறைந்த சி.டி.எஸ்) ஜெனரல் பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் பிளவுபடுத்தும் கருத்துகளை பகிர வெப் நியூஸ்,கல்சா டிவி,தி பஞ்ச் லைன்,48 செய்திகள்,தி நேக்கட் ட்ரூத்,நியூஸ் 24 உள்ளிட்ட சேனல்கள் பயன்படுத்தப்பட்டன என்றும்,தடைசெய்யப்பட்ட இந்த 20 யூடியூப் சேனல்களில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் நயா பாகிஸ்தான் குழுமம் (என்பிஜி) நடத்தும் சேனல்களும் அடங்கும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அதுமட்டுமல்லாமல்,என்பிஜி சேனல் குறைந்தது 3.5 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட YouTube சேனல்களின் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது எனவும், அவர்களின் வீடியோக்கள் 550 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சகம் தெரிவித்தது.இதனைத் தொடர்ந்தே,20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.