அயோத்தி வழக்கில் தொடரப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்கள் தள்ளுபடி..!
- அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சில இஸ்லாமிய அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
- இன்று விசாரணைக்கு வந்த அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அயோத்தி வழக்கில் கடந்த மாதம் 09-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் , அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் எனஉத்தரவு விட்டது.
மேலும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்பது மனுக்கள் இந்த வழக்கில் முன்பு சம்பந்தப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.மீதம் உள்ள ஒன்பது மனுக்கள் புதியவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி நிலம் தொடர்பாக முன்பு நடைபெற்ற வழக்கின் மனுதாரர்களில் ஒருவர் எம்.சித்திக். அவரின் மகனும் ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவருமான மவுலானா சையத் அஷ்ஹத் ரஷிதி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2-ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
மேலும் சில இஸ்லாமிய அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அயோத்தி தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும் இன்று நீதிபதி பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அயோத்தி தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு விட்டனர்.