ராஜஸ்தானில் அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் செப்டம்பர் 7ம் தேதி முதல் மீண்டும் திறப்பு.!
ராஜஸ்தானில் செப்டம்பர் 7ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வரான அசோக் கெக்லாட் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பரவலை கண்காணித்து ஒரு சில தளர்வுகளையும் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,670-ஆக அதிகரித்துள்ளது. இதில், தற்போது 14,099 பேர் சிகிச்சை பெற்றும், 59,579 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், அங்கு செப்டம்பர் 7ம் தேதி முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெக்லாட் அறிவித்துள்ளார். தரிசனத்திற்கு வருபவர்கள் முககவசம் அணிவதும், தனி மனித இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயம் என்று கூறியுள்ளார்.
மேலும், அடிக்கடி கிருமி நாசினி கொண்டு வழிப்பாட்டு தலங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், அதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் சோதனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளையும், சுகாதார நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். வழிபாட்டு தலங்களில் மக்கள் கூட்டம் சேராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.