யாருக்கும் லீவு கிடையாது., திமுக, பாஜக எம்பிகளுக்கு பறந்த ‘முக்கிய’ உத்தரவு!
இன்றும் நாளையும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எம்பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக, திமுக கொறடாக்கள் அந்தந்த கட்சி எம்பிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் கூட்டத்தொடர் நிறைவடையும் இந்த சூழலில், சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்றாற் போல, நேற்று, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் மிக முக்கிய மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று அல்லது நாளை அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும், இதன் மூலம் தேர்தல் செலவுகள் வெகுவாக குறைக்கப்படும் என்றும், தேர்தல் விதிமுறை காரணமாக மக்கள் நலத்திட்டங்கள் அவ்வப்போது தடைபடுவது தடுக்கப்படும் எனவும் மத்திய அரசு கூறி வருகிறது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் சூழல் நிலவுவதால், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நாடாளுமன்றத்திற்கு பாஜக உறுப்பினர்கள் அனைவரும் இன்றும் நாளையும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்றும் பாஜக கொறடா அக்கட்சி எம்பிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், திமுக எம்பிக்கள் அனைவரும் இன்றும் நாளையும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என திமுக கொறடா உத்தரவிட்டுள்ளார். அதேபோல மற்ற கட்சிகளும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் இன்றும் நாளையும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மிக முக்கிய பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற உள்ளது என டெல்லி அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.