வீட்டு வாயிலிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்ட அகிலேஷ் யாதவ்…!
தர்ணா போராட்டம் நடத்திய அகிலேஷ் யாதவ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தை உத்திரபிரதேசம் லக்கிம்பூரை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். நேற்று லக்கிம்பூரில் நடந்த நிகழ்ச்சி பங்கேற்க அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக கூறப்பட்டது. இதனால், துணை முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக சென்ற பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில், ஒரு கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க லக்கிம்பூருக்கு செல்ல இருந்த சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் அவரது வீட்டு வாயிலிலேயே கைது செய்யப்பட்டார்.
லக்னோவில் இருந்து லக்கிம்பூர் செல்ல வீட்டுக்கு வெளியே வந்த அகிலேஷை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து வீட்டு வாயிலில் தர்ணா போராட்டம் நடத்திய அகிலேஷ் யாதவ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். லக்னோவில் அகிலேஷ் யாதவ் வீட்டு முன் போலீசார் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ் வீட்டு முன் போலீசார், சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் குவிந்திருந்த நிலையில் போலீசார் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.
லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மோதிய கார் மத்திய அமைச்சர் மகனின் கார் என கூறப்படுகிறது.