பாஜகவில் இணைந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன்.!
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன், அனில் ஆண்டனி பாஜகவில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் முரளீதரன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். முன்னதாக அனில் ஆண்டனி, பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை விமர்சித்து ட்வீட் செய்ததற்காக காங்கிரஸில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் இணைந்த பின் அனில் ஆண்டனி கூறும்போது, நாட்டுக்காக உழைப்பதே எனது தர்மம் என்று கூறினார், இன்று, பல காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஒரு குடும்பத்திற்காக வேலை செய்வதே தங்கள் தர்மம் என்று நம்புகிறார்கள் என அவர் மேலும் கூறினார்.
கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) டிஜிட்டல் மீடியா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அனில் ஆண்டனி, பிரதமர் குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
கடந்த 2002இல் குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அம்மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கும், ‘இந்தியா: மோடி கேள்வி’ என்ற பிபிசி ஆவணப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.