இனி ஓட்டுநர் மட்டுமில்லை.. பக்கத்து சீட்டிலும் “ஏர்பேக்” கட்டாயம்- மத்திய அரசு அதிரடி!
காரில் டிரைவர் இருக்கை மட்டுமின்றி, பக்கத்தில் இருக்கும் இருக்கைக்கும் ஏர்பேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போதைய காலத்தில் காரில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக, பட்ஜெட் கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். நாம் காரில் செல்லும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நமது உயிரை காப்பதில் அதிகம் பங்காற்றுவது, சீட்பெல்ட் மற்றும் ஏர்பேக் ஆகும். இந்த ஏர்பேக்கின் வேலை என்னவென்றால், நமது கார் விபத்தில் சிக்கும்போது அந்த ஏர்பேக்குகள் விரிந்து, காரில் பயணிக்கும் பயணிகளை மூடிக்கொள்வதால், பயணம் செய்பவர்கள் சிறிய காயங்களுடன் உயிர்பிழைக்க அதிகளவில் வாய்ப்புள்ளது.
இந்த வகையான ஏர்பேக்குகள், ஹையர் வேரியண்ட் கார்கலில் அனைத்து இருக்கைகளுக்கு இருக்கும். ஆனால் பட்ஜெட் கார்களில் ட்ரைவர் சீட்டில் மட்டுமே இருக்கும். இதனால் பெரும்விபத்தில் சிக்கும்போது அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில், அனைத்து கார்களுக்கும் ஏர்பேக்குகள் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தற்பொழுது அனைத்து விதமான காரில் டிரைவருக்கு பக்கத்தில் இருக்கும் இருக்கைக்கும் ஏர்பேக் கட்டாயம் எனவும், இந்திய தரச்சான்று தரத்தில் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, 2021 ஏப்ரல் முதல் கட்டயாமாக்கப்படவுள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.