காற்று மாசு : டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவு!
டெல்லியில் காற்று மாசு தொடர்வதால் பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவு வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்துவதாலும், சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளுங்கள் என டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணி புரிய கூடிய ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியலாம் எனவும், கட்டுமான பணிகள் உள்ளிட்ட வெளியில் நடைபெறக்கூடிய பணிகளுக்கு தடை விதித்தும் டெல்லி அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இருப்பினும், காற்றின் மாசு இன்னும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து டெல்லி அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நகரங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 50% பேர் வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.