டெல்லியில் காற்று மாசுபாடு! கடந்த 6 மாதத்தில் 24,000 பேர் உயிரிழப்பு!
டெல்லியில், இந்த காற்று மாசு காரணமாக, 2020 முதல் ஆறு மாதத்தில் 24,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொதுவாகவே இந்தியாவை பொறுத்தவரையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. இந்த காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், டெல்லியில், இந்த காற்று மாசு காரணமாக, 2020 முதல் ஆறு மாதத்தில் 24,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிரீன்பீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IQAir ஏர் விஷுவல் மற்றும் கிரீன்பீஸ் தென்கிழக்கு ஆசியாவின் புதிய ஆன்லைன் கருவியின் படி, டெல்லி கடந்த ஆறு மாதங்களில் காற்று மாசுபாடு காரணமாக அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% க்கு சமமான, 26,230 கோடியை இழந்ததுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து,கிரீன்பீஸ் இந்தியாவின் காலநிலை பிரச்சாரகர் அவினாஷ் சஞ்சல் அவர்கள் கூறுகையில், காற்று மாசுபாடு ஒரு தீவிரமான பொது சுகாதார நெருக்கடியாகவும் நமது பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.