67 ஆண்டுகளுக்கு பின் டாடா வசம் செல்லும் ஏர் இந்தியா?
டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்நிறுவனத்திடமே செல்கிறது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை மற்றும் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.
ஜே.ஆர்.டி.டாடா தொடங்கிய டாடா ஏர்மெயில், டாடா ஏர் லைன்ஸாக மாறியபின் ஏர் இந்தியாவாக உருவாகியது. இந்தியாவின் முதல் விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்கும், டாடா நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு 1932ல் தொடங்கியது. 1932ல் டாடா ஏர் சர்வீஸ் என்ற பெயரில் இந்தியாவின் முதல் பயணிகள் விமான சேவையை ஜே.ஆர்.டி.டாடா தொடங்கினார்.
முதல் விமானத்தை ஜே.ஆர்.டி.டாடாவே கராச்சியிலிருந்து மும்பை நகருக்கு 1932ல் அக்.15ஆம் தேதி தானே ஒட்டி வந்தார். அதுபோல், மும்பையில் இருந்து முதல் விமானத்தை சென்னைக்கு டாடாவின் நண்பரான நெவில் வின்சென்ட் ஒட்டி வந்தார் என கூறப்படுகிறது. டாடா ஏர் சர்வீஸ் என்ற பெயரை 1938ல் டாடா ஏர்லைன்ஸ் என்று ஜே.ஆர்.டி.டாடா மாற்றினார்.
இரண்டாம் உலகப்போருக்கு பின் 1946 ஜூலை 29ல் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பின் 1948ல் ஏர் இந்தியாவின் 49% பங்குகளை இந்தியா அரசு வாங்கிய பின்னர் 1953ல் ஏர் கார்ப்பரேஷன் சட்டத்தை இயற்றிய மத்திய அரசு, ஏர் இந்தியாவின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.
ஏர் இந்தியா நிறுவனத்தை அரசு கையகப்படுத்திய பிறகும் அதன் தலைவராக ஜே.ஆர்.டி.டாடா தலைவராக தொடர்ந்தார். வெளிநாட்டு விமான சேவை நிறுவனம் ஏர் இந்தியா என்றும் உள்நாட்டு சேவை நிறுவனம் இந்தியா ஏர்லைன்ஸ் என்றும் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் 67 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டாடா வசம் செல்லும் ஏர் இந்தியா நிறுவனம் என்பது குறிப்பிடப்படுகிறது.