புதுச்சேரி: அதிமுக -பாஜக தொகுதி பங்கீடு இழுபறி.. பாமக, அதிமுக தனித்து போட்டியா..?
பாஜக, அதிமுகவிற்கு 3 தொகுதிக்குள் மட்டுமே ஒதுக்கப்படும் என கூறுவதால் தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது.
புதுச்சேரில் உள்ள 30 தொகுதியில் 16 இடங்கள் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிட உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளில் அதிமுக,பாஜக உடன்பாடு ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. வருகின்ற தேர்தலில் அதிமுகவிற்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக திட்டவட்டமாக உள்ளது. ஆனால் அதிமுக சார்பில் 7 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பாஜக வருகின்ற தேர்தலில் 11 தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதால் பாஜக -அதிமுக இடையே தொகுதி பங்கீட்டில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுகவில் தற்போது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தொகுதி பங்கீடு குறித்து பாஜகவிடம் பேச அதிமுக மேலிடத்தில் இருந்து யாரும் வராததால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
தொடர்ந்து நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தையிலும் பாஜக அதிமுகவிற்கு 3 தொகுதிக்குள் மட்டுமே ஒதுக்கப்படும் என கூறுவதால் பாஜக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்று போட்டியிடுமா..? அல்லது கூட்டணியில் இருந்து பிரிந்து தனித்து போட்டியிடுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. மறுபுறம் பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என கூறி வருகிறது.
பாமகவிற்கு தொகுதிகள் ஒதுக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடும் என பாமக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தலைமையில் அணி உருவாகும் என கூறப்பட்ட நிலையில், 18 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.