அசத்தும் AI வழக்கறிஞர்., தலைமை நீதிபதியின் கேள்விக்கு அசராத பதில்கள்.!
டெல்லியில் அமைக்கப்பட்ட தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தில் உள்ள AI தொழில்நுட்ப வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதி உரையாற்றியுள்ளார்.
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். அந்த அருகாட்சியகம் குறித்து சந்திரசூட் கூறுகையில், ” இந்த அருங்காட்சியகம் நமது தேசத்தில் நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்த அருங்காட்சியகம் தற்போது தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.” எனக்கூறி, ” நீதியை வழங்குவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த நீதிமன்ற அருங்காட்சியகத்தில் AI தொழில்நுட்ப உதவியுடன் ஒரு டிஜிட்டல் வழக்கறிஞர் திரை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அந்த AI வழக்கறிஞரிடம் சட்ட ரீதியில் கேள்விகள் கேட்கையில் அதற்கு உரிய சட்ட ஆலோசனைகளை வழங்கும்படி அந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த AI வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி சந்திரசூட், “இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டம் செயல்பாட்டில் உள்ளதா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு AI வழக்கறிஞர் பதில் கூறுகையில், “ஆம், மரண தண்டனை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது. இது உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட முக்கியமான வழக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் கொடூரமான குற்ற செயல்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது. ” என AI வழக்கறிஞர் தொழில்நுட்பம் கூறியது.
இந்த AI வழக்கறிஞர் தொழில்நுட்பம் பற்றி சந்திரசூட் மேலும் கூறுகையில், ” இந்த AI தொழில்நுட்ப வழக்கறிஞர் வசதியை செயல்படுத்த கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ளது. இது இன்னும் சரளமான மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு 6 மாதங்கள் ஆகும்.” என்றார்.
மேலும், ” இது நீதித்துறையில் ஒரு தொழில்நுட்ப சாதனை. நமது குடிமக்களுக்கு நீதி வழங்குவதிலும், அவர்களை நீதியின் வழியே பாதுகாப்பதிலும் நமது நீதிமன்றங்களின் முக்கியத்துவத்தை முன்வைக்க, தொல்பொருட்களின் அருங்காட்சியகம் மட்டுமல்ல, சர்வதேச அளவில் சிறந்த நீதித்துறை அருங்காட்சியகமும் அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். இது நமது குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.” என்றும் சந்திரசூட் கூறினார்.