அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் : ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத் மகன் , மருமகனுக்கு தொடர்பு ?
இத்தாலி நாட்டை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.பல்வேறு தரப்பினருக்கு சுமார் 300 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.ஆகவே இந்த வழக்கினை சிபிஐ விசாரித்தது.
மேலும் இது தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.அதாவது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு பணம் வந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த முறைகேடு குறித்து சம்மந்தப்பட்ட நபர்களை அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது.இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ராஜீவ் சக்சேனாவை அமலாக்கத்துறை கைது செய்தது.கடந்த 2019-ஆம் ஆண்டு துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜிவ் சக்சேனா அமலாக்கத்துறையிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.அவரது வாக்குமூலம் சுமார் 1000 பக்கங்களை கொண்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .அதிலும் குறிப்பாக எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வாறு லஞ்சம் கொண்டு வரப்பட்டது என்று விசாரணையில் கூறினார். “அவ்வப்போது” பிரிஸ்டைன் ரிவர் என்ற வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெற்றதாகக் கூறினார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .கமல்நாத்தின் மகனான பாகுல் நாத் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருவதாக கூறினார்.இந்த வழக்கில்,ஆயுத வியாபாரி மோகன் குப்தா மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தின் மருமகன் ராதுல் புரி ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.