காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்த பாஜக.? மன்மோகன் சிங் பேசியது என்ன.?
BJP – Congress : பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் விமர்சனம் செய்ததை அடுத்து, பாஜக தங்கள் சமூக வலைதள பக்கத்தில் மன்மோகன் சிங் பேசியதை பகிர்ந்துள்ளது.
பாஜக – காங்கிரஸ் நேரடியாக மோதும் ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள 12 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 26 (இரண்டாம் கட்ட தேர்தல்) ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்ட பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி கூறியது :
பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில் , நாட்டில் உள்ள சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போதே கூறினார்கள். மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை காங்கிரஸ் கட்சி கணக்கு எடுப்பார்கள். பின்னர், அதனை அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பார்கள். பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கூட கணக்கீடு செய்வோம் என தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. இப்படியான காங்கிரஸின் சிந்தனை, தாய்மார்களின் தாலியை கூட விட்டு வைக்காது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் விமர்சனம் :
பிரதமரின் பேச்சுக்கு, எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் கண்டங்களை எழுந்தன. மதரீதியில் வெறுப்பு பிரச்சாரத்தை பிரதமர் முன்வைக்கிறார் என கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், மோடி பேசியது வெறுப்பு பேச்சு மட்டுமல்ல. மக்களை மதரீதியில் திசை திருப்பும் சூழ்ச்சி. பதவிக்காக ஆதாரமற்ற பல்வேறு பொய்களை பிரதமர் கூறுகிறார். காங்கிரஸ் என்றுமே அனைவருக்கும் சமத்துவம் பற்றி தான் பேசுகிறது. அனைவருக்குமான நீதியை பற்றி பேசுகிறது. இந்திய பிரதமர்களின் மோடி அளவுக்கு எந்த பிரதமரும், பிரதமர் பதவியின் கண்ணியத்தை இந்த அளவுக்கு குறைத்து இல்லை என கடுமையாக விமர்சித்தார் கார்கே.
பாஜக பதிலடி :
காங்கிரஸ் கட்சியினரின் இந்த விமர்சனத்தை அடுத்து பாஜக தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசிய ஒரு சிறிய வீடியோ கிளிப்பை பதிவிட்டுள்ளனர். அதில், இஸ்லாமிய சிறுபான்மையினர், நாட்டின் வளர்ச்சியின் பலன்களை சமமாகப் பகிர்ந்து கொள்ள அதிகாரம் பெறுவதை உறுதிசெய்ய, புதுமையான திட்டங்களை நாங்கள் (காங்கிரஸ்) வகுக்க வேண்டும். நமது வளங்களின் மீது அவர்களுக்கும் உரிமை இருக்க வேண்டும் என கூறியதாக பாஜக பதில் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
டிசம்பர் 2006இல் மன்மோகன் சிங் பேசியது :
டிசம்பர் 2006ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறிய முழு விவரம் யாதெனில், விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளம், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்பு என பல்வேறு அம்சங்களில் SC/STக்கள் மற்றும் OBC வகுப்பினரை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்பின் அத்தியாவசிய பொதுத் தேவைகள் ஆகியவைகளுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுத்து தெளிவாக திட்டமிட்டுள்ளதாக நம்புகிறோம்.
ஆனால், சிறுபான்மையினர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர்களின் வளர்ச்சியின் பலனில் இடஒதுக்கீடு என்பது சமமாக இருப்பதை உறுதி செய்ய புதுமையான திட்டங்களை நாங்கள் (காங்கிரஸ்) வகுக்க வேண்டும். நமது நாட்டின் வளங்கள் மீதான உரிமையை அவர்களும் பெற்றிருக்க வேண்டும். இதற்கான எண்ணற்ற பொறுப்புகள் நமக்கு உள்ளது என 2006இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார் என்பதை NDTV செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.