ED காவலை தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!
Arvind Kejriwal: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவு.
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரியதை தொடர்ந்து, அனுமதி வழங்கப்பட்டது.
இதன்பின் கெஜ்ரிவாலை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட காவல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த சுழலில் அமலாக்கத்துறை காவல் முடிந்து இன்று டெல்லி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்படுகிறார். மார்ச் 21 முதல் இன்று வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டது.