ஆப்கானிஸ்தான் விவகாரம் : டெல்லியில் இன்று அனைத்து கட்சிகள் கூட்டம்…!
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று அனைத்து கட்சிகள் சார்பில் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பிற நாட்டு மக்கள் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் பலரும் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிப்பதற்காகவும், அதனை குறித்த விவரங்களை தெரிவிப்பதற்காகவும் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சகம் அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இக்கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் அரசு சார்பில் பங்கேற்க உள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? தலிபான்கள் மூலமாக வரக்கூடிய பிரச்சினைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா. டி ஆர் பாலு மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.