ஏரோ இந்தியா நிகழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு – பிரதமர் மோடி
கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்றது புதிய இந்தியாவில் உலக நாடுகளின் நம்பிக்கையை குறிக்கிறது என பிரதமர் மோடி பேச்சு.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14-வது ஏரோ இந்தியா 2023-ஐ தொடங்கிவைத்துள்ளார். 80க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஏரோ இந்தியா 2023 நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். சுமார் 30 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய மற்றும் இந்திய நிறுவனங்களின் 65 CEO-க்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
விமான சாகசங்கள்
போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகசங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது. விமான கண்காட்சியில் மொத்தம் 807 அரங்குகள் அமைக்கப்பட இருப்பதாகவும், அவற்றில் 107 அரங்குகள் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு புதிய உயரங்களைத் தொட்டு அவற்றையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஏரோ இந்தியா நிகழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்றது புதிய இந்தியாவில் உலக நாடுகளின் நம்பிக்கையை குறிக்கிறது. 2024-25க்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்கு என தெரிவித்துள்ளார்.